வெல்லாவெளி விவேகானந்தம் எழுதிய 'உமிச்சட்டி' சிறுகதை நூலுக்கு படைப்பிலக்கிய சாகித்திய விருது.

(சித்தா)

கிழக்கு மாகாண எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களை துறைரீதியாக வகைப்படுத்தி அவற்றுக்கான 'சிறந்த நூல் விருது' வழங்கிக் கௌரவிக்கும் செயற்பாட்டை கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் செயற்படுத்தி வருகின்றது.

இந்த வகையில் வெல்லாவெளியைச் சேர்ந்த தவசிப்பிள்ளை விவேகானந்தம்  2024 ஆண்டு கன்னி முயற்சியாக வெளியிட்ட 'உமிச்சட்டி' சிறுகதைத் தொகுதி நூலுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2025 ஆண்டுக்கான சிறந்த படைப்பு இலக்கியமாக தெரிவு செய்துள்ளது.

'உமிச் சட்டி' நூலில் உள்ள பதினைந்து சிறுகதைகளும், தினகரன், வீரகேசரி, ஞானம், தமிழகம் இனிய நந்தவனம் ஆகியவற்றில் வெளிவந்த திகதிகளுடன் பேராதனைப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களின் அணிந்துரையோடு வெளிவந்தது. 

இந் நூலுக்கான விருது வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால்  எதிர்வரும் 10.10.2025 திருகோணமலை உட்துறை வீதியில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.