மாகாணசபைத்தேர்தல் இழுத்தடிப்பிற்கு தேசிய மக்கள் சக்தியின் பின்னடைவே காரணம் - எம்.ஏ.சுமந்திரன் !
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுக்கூறத்தக்களவு பின்னடைவை சந்தித்தது. அதன் விளைவாகவே தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சி, மாகாணசபைத்தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்புச்செய்துவருகிறார்கள்.
அதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தற்போது பழைய முறையில் மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கு ஏனைய கட்சிகளும் இணங்கியுள்ள பின்னிணியில், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் பிரகாரம் உடனடியாகத் தேர்தல்களை நடாத்தவேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கான சாத்தியப்பாடு குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அக்கலந்துரையாடலில் பங்கேற்ற எதிரணி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்தினுள் உள்ளுராட்சிமன்றத்தேர்தல் மற்றும் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தேர்தல் இவ்வருடத்துக்குள் பழைய முறையில் நடாத்தப்படவேண்டும் என வலியுறுத்தினர்.
அதுமாத்திரமன்றி ஏற்கனவே கடந்த பாராளுமன்றத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது மீண்டும் சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பான தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் பழைய முறையிலேயே தேர்தலை நடாத்தமுடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் இதுபற்றிக் கருத்துரைத்த சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் யாழில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்துக்கு வருகைதந்து எம்மைச் சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எம்மிடம் மாத்திரமன்றி ஊடகங்கள் முன்னிலையிலும் ஒரு வருடத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படும் என உறுதியளித்தார்.
அதுமாத்திரமன்றி கடந்த பாராளுமன்றத்தில் மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணையை அநுரகுமார திஸாநாயக்க உள்ளடங்கலாக மக்கள் விடுதலை முன்னணியினர் முழுமையாக ஆதரித்தனர்.
அவ்வேளையில் எல்லை நிர்ணயம் செய்யவேண்டும் என அவர்கள் கோரவில்லை. பாராளுமன்றத்தெரிவுக்குழுவிலும் அவர்கள் அதுபற்றிப் பேசவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியினர் எல்லை நிர்ணயம் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னரும் இருந்திருந்தால், அவர்களது தற்போதைய நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளமுடியும் எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் இப்போதுதான் அவர்களது நிலைப்பாடு திடீரென மாறியிருப்பதாகத் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுக்கூறத்தக்களவு பின்னடைவை சந்தித்தது. அதன் விளைவாகவே தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சி, மாகாணசபைத்தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்புச் செய்துவருகிறார்கள்.
அதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. தற்போது பழைய முறையில் மாகாணசபைத்தேர்தல்களை நடத்துவதற்கு ஏனைய கட்சிகளும் இணங்கியுள்ள பின்னிணியில், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் பிரகாரம் உடனடியாகத் தேர்தல்களை நடாத்தவேண்டும் என்றும் சுமந்திரன் வலியுறுத்தினார்.