2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம் !


சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 7, 2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விசேட உரையாற்றவுள்ளார்.

இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு - செலவுத்திட்டமாகவும் அமைகின்றது.

வரவு - செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய இரண்டாவது மதிப்பீடான வரவு - செலவுத்திட்ட உரையை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.

நாளை (8) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலைவிவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு-செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்

2026 நிதியாண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுறையினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபா, கல்வி ,உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபா, அரச நிர்வாகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டம் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் காமினி வீரசிங்க குறிப்பிடுகையில்,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை குறைத்து அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது. நிறைவேற்றப்படுகிறது. வரவு - செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் முறையாக செயற்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டும் அவ்வாறான நிலையே காணப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும். ஆனால் தனியார் துறையினர் தொடர்பில் பேச்சளவில் மாத்திரமே நிவாரணங்கள் குறிப்பிடப்படும். ஆகவே வாழ்க்கைச் செலவினை குறைத்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனுடையதாக அமையும்.

வாழ்க்கைச் செலவுக்கும், மாத சம்பளத்துக்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகிறது. ஆகவே அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றனர்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளம்

2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கத்தின் தீர்வினை எதிர்பார்த்துள்ளோம் என பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்பள விவகாரம் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களுக்கு மானிய அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் பெருந்தோட்ட மக்கள் வலியுறுத்துகின்றர்.

2026 நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் வழக்கம் போலவே பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் வழக்கத்திற்கு மாறாக ஜனாதிபதி செலவீனத்திற்கான நீதி ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ள அதேவேளை, இந்த வரவு - செலவுத்திட்டத்தில் மக்களுடன் தொடர்பு பட்ட மக்கள் நலன்சார் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசின் கன்னி வரவு - செலவுத்திட்டமான 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கும் இரண்டாவது வரவு - செலவுத்திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்திற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

2026 ஆம் ஆண்டுக் கான வரவு - செலவுத் திட்டத்தில் செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64, 68000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அரச செலவீனமாக 4 இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான அரச செலவீனம் 21610கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 13,725,000, 000ரூபா, பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 3,563,000,000 ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 210,000,000 ரூபாய், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 270,000,000 ரூபா, இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 300,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்டத்தில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 14,500,000, 000 ரூபா, பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு 1,350,000,000 ரூபாய், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 204,000,000 ரூபாய், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்துக்கு 178,000,000 ரூபாய், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்கு 285,000, 000ரூபா என்ற வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டை காட்டிலும், 2026 ஆம் ஆண்டுக்கு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சுக்கு 77 கோடியே 50 இலட்சம் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்க்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கக்கு 61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமாரவின் விடயதானத்துக்குள் உள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் , டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்குமாக மொத்தம் 11, 6980 கோடியே 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மூன்று அமைச்சுகளுக்காக 1,105,782, 000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரண்டு அமைச்சுகளுக்குமான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 297,49,80, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதிக்கான செலவினமாக 1137,79,80000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 838,50,00000 ரூபா அதிகமாகும். அதேவேளை பிரதமர் செலவினமாக 2025 ஆம் ஆண்டுக்கு 117,0000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவீனமாக 97,50,00000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 19,50,00,000 ரூபா குறைவானதாகும்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட் டல் அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு 30,050,000,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 38,600,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 855 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 271,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 301,000,000,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 3000 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு 496,500,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 596,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 99,500,000000 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்படுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 308,499,998,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 554,999,998,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 246,500,000.000 ரூபா அதிகமாக ஒதுக்கப்படுள்ளது.

ஜனாதிபதியின் கீழுள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு 714,177,500,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 634,782,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 79,395,500,000 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சு 54,106,300இ000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 58,500,000,000ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் 439 கோடி 37 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற் றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு 473,410,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 446,000,000,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2741 கோடி ரூபா குறைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப் பாசன அமைச்சுக்கு 208,722,000, 000ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 221,300,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 125 கோடி 78 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற் றும் வீடமைப்பு அமைச்சுக்கு 101,282,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 103,500,000, 000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 22 கோடி 18 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 16,738,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 18,000,000, 000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 126 கோடி 20 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு 13,443,000, 000ரூபா ஒதுக்கப்படட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 11,500,000, 000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 194 கோடி 30 இலட்சம் ரூபா குறைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 11,440,000, 000 ரூபா ஒதுக்கப்படட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 10,600,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 84 கோடி ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் சுற்றாடல் அமைச்சுக்கு 16,040,000, 000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 18,300,000, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 226 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு வலுசக்தி அமைச்சுக்கு 21இ142இ000இ000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 23,100,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 195 கோடி 80 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 21,463,000, 000 ரூபாய்' ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 23,000,000, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 153 கோடி 70 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 2,564,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 2,700,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 13 கோடி 60 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 14,526,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 16,400,000,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 187 கோடி 40 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு 13,623,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 16,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 237 கோடி 70 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கு தொழில் அமைச்சுக்கு 6,070,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 6,400,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 33 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 12,100,000இ000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 13,500,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் 140 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது .2025 ஆம் ஆண்டுக்கு விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு 5,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 6,000,000, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 100 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது