2026 Budget 'முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக்' கொண்டுள்ளது - கிரிஷான் பாலேந்திர !


2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கிரிஷான் பாலேந்திர தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தால் புதிய முதலீடுகளுக்குள் நுழைய தனியார் துறைக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2026 வரவு செலவுத் திட்டம் குறித்த பிந்தைய வரவு செலவுத் திட்டக் கலந்துரையாடல் நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும உட்படப் பல வர்த்தகத் துறைப் பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும,

"பல்வேறு அணுகுமுறைகள் மூலம், வர்த்தகங்கள் வளர்ச்சி அடைவதற்கும், அதிக இலாபம் ஈட்டுவதற்கும் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். டிஜிட்டல் மயமாக்கல், ஊழலுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது ஆகியவை அத்தகைய அணுகுமுறைகளில் சிலவாகும். இந்த அணுகுமுறைகள் ஏற்கனவே பலன்களை அளித்துள்ளன என்று நான் நினைக்கிறேன்.

இது சிறந்த ஒருங்கிணைப்பு, முறைமைகளின் மூலம் குறைந்த கசிவுகள் மற்றும் அனைவரும் பங்கேற்கக்கூடிய ஒரு பயணத்தை உருவாக்கும். இந்த அணுகுமுறைகள் குறைந்த ஆபத்துடன் அதிக வருமானத்தைச் சேகரிக்கும். இந்தச் செயற்பாடுகள் முறைமைக்காகவும், வணிகங்களுக்காகவும், மக்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்காமலும் நடைபெறும். இதில் எங்களுக்குத் திடமான நம்பிக்கை உள்ளது. 2026 இல் எமது நோக்கங்களை நிறைவேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்."

தொழில் அமைச்சர் மற்றும் நிதி பிரதி அமைச்சரின் கருத்து கலாநிதி அனில் ஜயந்த கருத்து தெரிவிக்கையில்,

"நாம் தூய்மையான அரசியலைப் பேணுகிறோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறோம். இந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போதும் நாம் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றினோம். இரண்டாவது முக்கியமான விடயம் என்னவென்றால், தரமான மற்றும் அளவீட்டு காரணிகள். தரமான காரணிகள் மிகவும் முக்கியமானவை.

நாம் யாரையும் கைவிடவில்லை. அனைவரும் இணைந்து ஒரே இலக்கை அடைவதற்கும், அதன் பலன்களைப் பொதுவில் அனுபவிப்பதற்கும் முடியும் என்ற உணர்வை இது உருவாக்குவதால், அது ஒரு முக்கிய காரணி என்று நான் நினைக்கிறேன்."

வர்த்தக சபைத் தலைவர் கிரிஷான் பாலேந்திர கருத்து தெரிவிக்கையில்,

"பல ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் குறைந்த பணவீக்கம் மற்றும் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் குறைந்த வட்டி வீதங்கள் ஆகியவற்றைக் காண்கிறோம். காலப்போக்கில் தனியார் துறையில் அதிகரித்து வரும் இந்த நம்பிக்கை நாட்டிற்கு ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ள மிக முக்கியமான காரணி, நாம் பொருளாதார ஒழுக்கத்தைப் பேணுவதுதான். இந்த ஒழுக்கம் தனியார் வணிகங்கள் செயல்படும் அல்லது வெற்றி பெறும் விதத்தில் பெரிதும் தாக்கம் செலுத்தும்."