ஜனாதிபதி முதலில் தன் கட்சி உறுப்பினர்களை போதை வர்த்தகத்திலிருந்து விலகுமாறு அறிவுறுத்துவது அவசியம் – நாமல் ராஜபக்ஷ !


போதைப்பொருளுக்கு எதிராக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி முதலில் தனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவது அவசியம். அண்மையில் போதைப்பொருள் உள்ளதா என மாணவர்களின் பைகளை சோதனையிட்டனர். அதற்கு பதிலாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் பைகளை சோதனை செய்திருக்கலாம் என மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி முதற்கொண்டு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் பேச்சு திறமை உடையவர்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும்.

பேச்சு திறமையை போல அவர்களின் செயலும் இருக்கும் என கடந்த வரவு செலவு திட்டத்தின் போதே எதிர்பார்தோம். எனினும் அவர்களின் செயல் திறனை இதுவரை காணவில்லை.

இம்முறை வரவு -செலவு திட்ட உரையின் போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஜனாதிபதி உரையாற்றலாம். வரவு – செலவு திட்ட உரையினூடாக வழங்கப்படும் வாக்குறுதிகள், பொதுமக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்பதில் எமக்கு நம்பிக்கையில்லை.

திருடர்கள் என எம்மீது குற்றம் சுமத்திய தேசிய மக்கள் சக்தி தற்போது வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்கிறது. வெங்காய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைத்து வெளிநாட்டில் இருந்து அவற்றை கொள்வனவு செய்வதுடன் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை அனாதையாக்கி அவற்றையும் இறக்குமதி செய்கின்றனர்.

போதாத குறைக்கு மீன்பிடி நடவடிக்கையையும் பாதிக்கும்படி மீன்களையும் இறக்குமதி செய்கின்றனர். புலனாய்வு தகவலின் படி போதைப்பொருள் அடங்கிய 323 கொள்கலன்களை சுங்கத்திலிருந்து வெளியே கொண்டு செல்லவும் அனுமதியளித்துள்ளார்.

இந்த அரசாங்கம் திருடர்கள் என பலி சுமத்தி விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் பின்னணியிலும் இவ்வாறே தெரிவித்தனர்.

ராஜபக்வின் ஆதரவாளர்கள், நாமலின் ஆதரவாளர்கள் என கூறினார்கள் இறுதியில் கைது செய்யப்பட்டவர்கள் திசைக்காட்டியை சேர்ந்தவர்களே.

எனினும் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் அரச பாடசாலை அதிபர் ஒருவருக்கு தொடர்புள்ளமையே பெரும் பிரச்சினையாக உள்ளது. நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது.

போதைக்கு அடிமையான நபர்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் பாடசாலை மாணவர்களின் சிந்தனையிலிருந்து இவ்வாறான எண்ணங்களை அகற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரவில்லை.

அதிபர், ஆசிரியர்கள் ஊடக பாடசாலையினுள் போதைப்பொருளை கொண்டு செல்லும் வர்த்தகத்தை மறைக்கும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது.

ஆகையால் அரசாங்கம் இந்த நகைச்சுவையை நிறுத்திவிட்டு உடனடியாக மாணவர்களின் எதிர்காலத்தையும் பெற்றோர்களின் நலனையும் கருதி செயற்படுமாறு வலியுறுத்துகிறேன்.

போதைப்பொருளுக்கு எதிராக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி முதலில் தனது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவது அவசியம்.

அண்மையில் போதைப்பொருள் உள்ளதா என மாணவர்களின் பைகளை சோதனையிட்டனர். அதற்கு பதிலாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் பைகளை சோதனை செய்திருக்கலாம். குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு ஒருபோதும் முயற்ச்சிக்க வேண்டாம் என்றார்.