நாட்டை நாசமாக்கிய தரப்புகள் நடத்தும் பேரணியில் பங்கேற்குமளவுக்கு நான் முட்டாளில்லை - சரத் பொன்சேகா !


நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை பேரணியில் பங்கேற்குமளவுக்கு, தாம் முட்டாளில்லையென முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு இடமளிக்கக் கூடாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் இணைந்து நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி,இந்த பேரணியை நடத்தவுள்ளன. இதற்கு எதிர்ப்பை தெரிவித்தே பொன்சேகா இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.இது பற்றி மேலும் தெரிவித்த அவர்;

எதிரணி தரப்பில் உள்ள கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள், நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ நன்மை பயக்கும் வகையில் அமையவில்லை. இதனால்தான், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த முகாமிலிருந்து வெளியேறிவிட்டேன்.

எனவே, மீண்டும் எதிரணி கூட்டணிக்குள் செல்லும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை . எதிரணி தரப்பில் உள்ளவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதென்றே நான், பிரார்த்திக்கிறேன்.

நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் மீண்டும் ஆணை வழங்கக்கூடாது.