சங்காரவேல் பவுண்டேசனினால் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் - 2026


கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்கு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் - 2026

கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படும் பொருளாதார உதவி தேவைப்படும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2012 ஆண்டு தொடக்கம் சங்காரவேல் அமைப்பின் ஒழுங்கமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுவருகின்றது. இப்புலமைப் பரிசில் வழங்குவதற்குரிய விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் 30.11.2025 ஆகும். இப்புலமைப் பரிசில் பொருளாதார தேவையுடைய மிகப் பின்தங்கிய பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இப்புலமைப் பரிசில் திட்டத்தில் இணைந்த 120 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது இவர்களில் 30 மருத்துவத்துறை மாணவர்களும், பொறியியல்துறைக்கு 56 மாணவர்களும், சட்டத்துறைக்கு 20 மாணவர்களும், ஏனைய விசேட துறைகளுக்காக 14 மாணவர்களும் உள்ளடங்குகின்றார்கள். இதில் தற்போது மருத்துவத்துறை மாணவர்கள் 13 பேருக்கும், பொறியியல்துறை மாணவர்கள் 16 பேருக்கும் தொடர்ச்சியாக புலமைப் பரிசில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஏனையோர் பல்கலைக்கழக கல்வியைப் பூர்த்தி செய்துள்ளார்கள்.
புலமைப் பரிசில் திட்டம் - 2025


இத்திட்டத்தினூடாக புலமைப் பரிசில் பெற்ற 06 பேர் தலா ஒருவருக்கு புலமைப் பரிசில் வழங்க முன்வந்து தற்போது வழங்கிக் கொண்டிருப்பது இவ்வமைப்பிற்குக் கிடைத்த பெரு வெற்றியாகக் கருதப்படுகின்றது.

இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கு நன்கொடையாளர்களாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் சிவகாமி பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் திரு/திருமதி பரமேஸ்வரன், ரெயின்வோ பவுண்டேசன் அமைப்பின் ஸ்த்தாபகர் திரு/திருமதி நிர்மலன், திருமதி ஆர். சிறிதரன், சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் திரு/திருமதி சுகுமார், சரஸ்வதி பவுண்டேசன் அமைப்பின் திரு/திருமதி மனோகரன் ஆகியோருடன் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு/திருமதி சிவலிங்கம் சோமஸ்கந்தன் ஆகியோர் நிதியுதவி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் பொறியியலாளர் திரு. Y. சசிகாந்த், பொறியியலாளர் திரு. k. லோகாட்சரன், பொறியியலாளர் செல்வி L. பிரசந்தியா, பொறியியலாளர் செல்வி. S. தர்சிகா, பொறியியலாளர் K. சதுர்சன், அர்ச்சனா அர்ச்சோபனா (ஒருவருக்கு) ஆகியோரும் தலா ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புலமைப் பரிசில் கொடுப்பனவாக மருத்துவத் துறைக்கு மாதாந்தம் 15000.00 ரூபாவும், பொறியியல் துறைக்கு மாதாந்தம் 12000.00 வழங்குவதற்கு நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளார்கள். இக்கொடுப்பனவு இத்திட்டத்தினூடாக மாத்திரம் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கே பொருந்தும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்கின்றார்கள். இத்தொகையானது அவர்களது கல்வி முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படுவதை நன்கொடையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் எதிர்வரும் 30.11.2025 ஆந் திகதிக்கு முன்பாக விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவு புலமைப்பரிசில்களே வழங்கப்படுவதனால் பொருளாதார உதவி அதிகம் தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD HERE