விசேட அதிரடிப் படைக்காக (STF) 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விசேட அதிரடிப் படையின் (STF) தற்போதுள்ள மோட்டார் சைக்கிள் வாகனங்களில் 90% வீதமானவை 10 வருடங்களுக்கும் மேலாகப் பழமையானவை. இதனால், தொடர்ந்து இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதுடன், விசேட அதிரடிப் படையின் முக்கிய நடவடிக்கைகளான திடீர் சுற்றிவளைப்புகள், பதுங்குதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு போன்ற கடமைகளைத் திறமையாக மேற்கொள்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, விசேட அதிரடிப் படையினரின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, விசேட அதிரடிப் படைக்காக பின்வரும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன:
100 மோட்டார் சைக்கிள்கள் (125 cc எஞ்சின் கொள்ளளவு கொண்டவை)
50 முச்சக்கர மோட்டார் வண்டிகள்
இந்த புதிய வாகனங்கள், விசேட அதிரடிப் படையினர் நாட்டின் முக்கிய இடங்களில் (76 பிரதான முகாம்கள், 23 உப முகாம்கள் மற்றும் 14 பிரிவுகள்) தமது பணிகளைத் திறம்பட மேற்கொள்ள உதவும்.








.jpeg)


.jpeg)
