சீரற்ற வானிலையால் 3 மில்லியன் கோழிகள் உயிரிழப்பு ; முட்டைகளின் விலை மேலும் உயரும் !


இலங்கையை பாதித்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கை முழுவதும் 3 மில்லியன் முட்டையிடும் கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும், முட்டைகளின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கோழி முட்டைகளுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும், எனவே இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இன்று வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சீதுவை - ரத்தொலுகடவில் உள்ள அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான அலுவலக கேட்போர்கூடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்,

வருடத்தின் 25 சதவீதம் கேக் விற்பனை வரவிருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதிகளில், முட்டை பற்றாக்குறை ஏற்பட்டால், அது பண்டிகை காலத்தை பாதிக்கலாம்.

மாவு, சீனி, முட்டை ஆகியவை பேக்கரி தொழிலுக்கு அவசியமான பொருட்கள் என்றும், முட்டை பற்றாக்குறை ஏற்பட்டால், பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் அல்லது முழு பேக்கரி துறையும் ஸ்தம்பிக்கக்கூடும்.

எனவே, தற்போதைய நிலைமையை கவனமாக ஆய்வு செய்து, முட்டை பற்றாக்குறைக்கு மாற்று தீர்வுகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.