கலாநிதி கணபதிப்பிள்ளை ஞானரெத்தினம் 40 வருட கல்விச் சேவையில் ஓய்வு

(சித்தா) 
கலாநிதி கணபதிப்பிள்ளை ஞானரெத்தினம்  04.12.2025 திகதி 40 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஓய்வு   மட்டக்களப்பு குருக்கள்மடத்தை சேர்ந்த இவர்  கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் பௌதிக விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக தமது கல்விச் சேவையை ஆரம்பித்து அங்கிருந்து இடமாற்றம் பெற்று மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் சேவையைத் தொடர்ந்தார் பின்னர் திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்று இன்றுவரை தனது சேவையைத் தொடருகின்றார்.

தனது ஆரம்பக் கல்வியை குருக்கள்மடம் மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இரண்டாம் நிலைக் கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் கல்லூரி நிலையை மட்/புனித மிக்கேல் கல்லூரியிலும் இவர் பூர்த்திசெய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் தனது முதலாவது பௌதிக விஞ்ஞானப்பட்டத்தை கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தை கொழும்பு பல்கலைக் கழகத்திலும் கல்வி முதுமாணிப் பட்டத்தை திறந்த பல்கலைக் கழகத்திலும் கல்வி முதுதத்துவமாணிப் பட்டத்தை கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் தொடர்ந்து கல்வியில் கலாநிதிப் பட்டத்தை பேராதனைக் பல்கலைக் கழகத்திலும் பெற்று பெருமை பெற்றார்.

தற்போது திறந்த பல்கலைக்கழக கல்விப் பீடத்தின் சிஷேஸ்ட விரிவுரையாளராகவும் பட்டமேல் கல்வி டிப்ளோமா பாடநெறியின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தின் இணைப்பாளராகவும் கடமையாற்றும் இவர் கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ் பல்கலைக்கழகம்,  தென்கிழக்கு பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் போன்றவற்றில்  வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். முக்கியமாக பல்கலைக்கழக ஆய்வு மகாநாடுகளில் பல ஆய்வறிக்கைகளை மீளாய்வு செய்கின்ற அனுபவும் இவருக்கு உண்டு.கல்வி  தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய இவர் ஆசிரியர்களுக்கான கல்விப் புள்ளிவிபரவியல், ஆசிரியம் வெற்றி பெற,  மகிழ்ச்சிகரமான பாடசாலை மற்றும் ஆசிரிய வாண்மைத்துவம் ஆகிய  நூல்களையும் எழுதியுள்ளார்.

சமூக சமயப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர் பல்வேறு நிறுவனங்களின் பொறுப்புவாய்ந்த உறுப்பினராகவும் சேவை செய்து வருகின்றார்.