பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உணவு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை



சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான பகுதிகளில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகக் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
ஏதேனும் ஓரிடத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால், உடனடியாக அப்பகுதியின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறு அச்சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரளஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, மன்னார் மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை விற்பனைக்காகக் களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல் மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை வதை செய்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய்கள் மற்றும் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதீப் பொரளஸ்ஸ குறிப்பிட்டார்.