வெள்ளப் பேரிடரின் போது அவசர மீட்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புக் (NDRF) குழுவினர் தங்களது ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நிலையில், இன்று இலங்கையை விட்டு புறப்பட்டனர்.
டித்வா புயலால் இலங்கையின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான நடவடிக்கையாக இந்தியா அரசு ‘சாகர் பந்து’ நடவடிக்கையின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF)யை தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக அனுப்பியது.
டித்வா சூறாவளிக்குப் பின்னர் முதல் 24 மணிநேரத்திற்குள் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புப் பணியாளர்கள் குழுவை அனுப்பிய முதல் நாடு இந்தியா. தங்களது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர்கள், இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இருந்து புறப்பட்டனர்.
இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் பல மாவட்டங்களில் விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. 80 சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் K9 நாய்கள் அடங்கிய குழு, நவம்பர் 29ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து உடனடியாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பதுளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை, புத்தளம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய வெள்ளம் மற்றும் மண்சரிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக, நீரில் மூழ்கிய குடியிருப்புகளுக்குள் சென்று மக்களை மீட்டமை, வீடுகளில் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியமை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டமை, நிவாரண பொருட்களை விநியோகித்தமை, அவசர மருத்துவ உதவி வழங்கியமை போன்ற பல முக்கிய பணிகளை இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முன்னெடுத்தன.
இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு சுமார் 150 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. உயிரிழந்தவர்களை மீட்டதோடு, சிக்கியிருந்த மிருகங்களையும் மீட்டது. நீர்மட்ட உயர்வு, அணுகுமுறை சேதம் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பு இருந்தபோதிலும், உதவி வேண்டிய ஒவ்வொரு அழைப்பிற்கும் பதிலளித்து செயற்பட்டது.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு உதவிகளை வழங்கினர். இது அவர்களின் மனிதாபிமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
மண்சரிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில், இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் 8–10 அடி ஆழம் வரை மண், பாறை, சேறு ஆகியவற்றை தாண்டி, மோசமான வானிலை மற்றும் இடிந்து விழும் அபாயம் உள்ள சரிவுகளின் நடுவே நீண்ட தூரம் நடந்து சென்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்தன.
இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, நீர்கொழும்பு கொச்சிக்கடை மற்றும் வென்னப்புவ உள்ளிட்ட பகுதிகளில் 1,600க்கும் மேற்பட்ட உணவுப் பொதிகளை விநியோகித்தன. தொடர்பாடல் முறை பெருமளவில் செயலிழந்திருந்ததால், இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக அமைந்தது.
கம்பஹா மாவட்டத்தில் கழிவு நீரில் கலந்த 14 கிணறுகளை சுத்தம் செய்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் தூய்மையான குடிநீரையும் இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு வழங்க உதவினர்.
இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு, வெள்ள மீட்பு, இடிந்து விழுந்த கட்டடங்கள், மண்சரிவு, சூறாவளி, இரசாயன அவசரநிலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றது.
நவீன உபகரணங்களும் பயிற்சி பெற்ற K9 நாய்களையும் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல நாடுகளில் பேரிடர் உதவியில் ஈடுபட்டுள்ளது. பூட்டான், மியான்மார், நேபாளம், துருக்கி, ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்கு முன்னர் உதவி செய்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இலங்கையில் இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழு மேற்கொண்ட பணிகள், இந்தியா – இலங்கை உறவின் ஆழமான மனிதாபிமான பிணைப்பையும் நீடித்த கூட்டுறவையும் வெளிப்படுத்துகின்றன.








.jpeg)




