இவ்வருடம் 10 புதிய மருந்துகள் சந்தைக்கு அறிமுகம் !


இவ்வருடத்தில் 10 புதிய மருந்து வகைகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் 4,000 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகளை (Capsules) உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்தக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் 70 வகையான மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதேவேளை, வரலாற்றில் அதிகளவான மருந்து உற்பத்தியைக் கடந்த வருடம் முன்னெடுக்க அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் முடிந்துள்ளது. அதற்கமைய 3,625 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய மருந்து உற்பத்தியான 385 மில்லியன் மாத்திரைகள் மற்றும் குளிசைகள், கடந்த வருடம் மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 5 புதிய மருந்துகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மருத்துவ விநியோகப் பிரிவு வழங்கிய அனைத்து கொள்வனவுக் கட்டளைகளையும் தட்டுப்பாடின்றி விநியோகிக்கவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2025ஆம் ஆண்டில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மொத்த வருமானம் 27.06 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.