நிந்தவூர் பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவினரால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகனச் சோதனையின்போது 3 வாகனங்கள் உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டுமெனக் கூறி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கையின் போது 50இற்கும் மேற்பட்ட வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 30 வாகனங்களில் சிறிய குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில், அவற்றை 10 நாட்களுக்குள் சீர்செய்வதற்கான நிபந்தனையுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. எனினும், மிக மோசமான நிலையில் காணப்பட்ட 03 வாகனங்களுக்கு உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) விடுக்கப்பட்டு, அவற்றின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்தச் சோதனையில், அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியூடாகப் பயணிக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூரப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
எதிர்வரும் 10 நாட்களுக்குள் வாகனங்களை சீர்செய்து அம்பாறை மாவட்ட செயலகத்திலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து பரிசோதகர் காரியாலயத்தில் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அதன் பின்னரே தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன ஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் வாகன உரிமையாளர்களுக்கு அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரதான பரிசோதகர் ரொஹான் டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆபத்தான மேலதிக அலங்காரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை உடனடியாக அகற்றுமாறும் சாரதிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். அம்பாறை மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அக்கரைப்பற்று — கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த 50 க்கும் மேற்பட்ட நீண்டதூர, குறுகியதூர பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பயணிகள் பேருந்துகள் போதிய பாதுகாப்பு வசதியுடன் உள்ளனவா, பயணிகளுக்கு உகந்த வசதிகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பாகவும் சோதனையின்போது கவனம் செலுத்தப்பட்டது.இவ்வாறிருக்க விதிமுறைகளை மீறிய சில வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து வாகன பிரதான பரிசோதகர் ரொஹான் டீ சில்வா தலைமையில் இடம்பெற்ற இச்சோதனை நடவடிக்கையில், அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து வாகனப் பரிசோதகர்களான எல். டபிள்யு. ஆரச்சி, துஷித திஸ்ஸாநாயக்க, போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சி.ஐ. டி. பத்திரண உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.















