விஷ மதுபானத்தால் 6 பேர் பலியான சம்பவம் - பிரதான சூத்திரதாரி கைது



சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 பேரின் பிரேத பரிசோதனைகள் சிலாபம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன. இதில், மதுசாரம் நஞ்சானதாலேயே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றைய நபரின் பிரேத பரிசோதனை இன்று (08) சிலாபம் வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

மதுபானம் அருந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்ட மேலும் 08 பேர் தற்போது நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 6ஆம் திகதி சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது ஏற்கனவே இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இரு பெண்களையும் நேற்று (07) மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வென்னப்புவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.