இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்புகளை மேற்கோள்காட்டி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட கூறுகையில், அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்த தாழமுக்கம் கிழக்கு கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் மத்திய ஆகிய பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய வட மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் 75 - 100 மி.மீ வரையான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்துள்ளது.
அவ்வாறே வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் 50 - 75 மி.மீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை பிரதேசங்களில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மாகாணத்தின் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை மற்றும் சுமார் 100 மி.மீ மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் 75 - 100 மி.மீ வரையான மழையை இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் எதிர்பார்க்க முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 80% - 90% வரை நிரம்பியுள்ளதாகவும், அதற்கமைய அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுக்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் 80 இராணுவக் குழுக்கள், கடற்படை படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், விமானப்படையினர் வீரவில, பாலாவி, இரத்மலானை, ஹிங்குரக்கொட, அனுராதபுரம் ஆகிய இடங்களில் ஹெலிகொப்டர் வானூர்திகளை நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்த சம்பத் கொட்டுவேகொட, இதற்கு மேலதிகமாக இலங்கை பொலிஸாரும் சிவில் பாதுகாப்பு திணைக்களமும் அவசர நிலைமைக்காகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.









.jpg)



.jpeg)