திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - அவதானமாக இருக்க அறிவுறுத்தல் !




இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டிற்கு அதி தீவிர மழைவீழ்ச்சி கிடைக்குமாயின் நீர்நிலைகளின் சடுதியாக நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கிறது.

இன்று (08) காலை நிலவும் வானிலை குறித்துத் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமையச் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட இடமுண்டு என்று தெரிவித்தார்.

விசேடமாக அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வடக்குப் பிரதேசங்களில் தீவிர மழைவீழ்ச்சி பதிவானால், பிரதான ஆறுகள் இல்லாவிடினும் எதிர்காலத்தில் வெள்ள நிலைமை ஒன்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், மக்கள் அது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தற்போது அநேகமான குளங்களில் அபாய மட்டத்திற்கும் கீழேயே நீர்மட்டம் காணப்படுவதாகக் கூறிய அவர், நீர்ப்பாசனக் கணிப்பீடுகளின்படி ஒட்டுமொத்த குளங்களின் நீர் கொள்ளளவில் 80% - 90% இற்கும் இடைப்பட்ட அளவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் விசேடமாகக் கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களை உள்ளடக்கிய குளங்களில் வான் பாயும் நிலை காணப்படுவதாகவும், 73 பிரதான குளங்களில் 25 குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும், நடுத்தர அளவிலான 24 குளங்கள் தற்போது வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

இங்கு சூரியபண்டார மேலும் குறிப்பிடுகையில், நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய தினங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டு குளங்களில் குறிப்பிடத்தக்க இடவசதி பேணப்பட்டு வருகின்ற போதிலும், தீவிர மழைவீழ்ச்சி ஏற்பட்டால் மேலும் வான் கதவுகளைத் திறக்க நேரிடும் என்றார்.

இதேவேளை, 6 மகாவலி நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து கொண்டிருப்பதுடன், லொக்கலஓயா, ஹேபொல, மாதுருஓயா, கந்தலயம, கலாஓயா மற்றும் களுகங்கை என்பன அவற்றில் அடங்குகின்றன.

மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களில் சுமார் 95% நீர் கொள்ளளவு காணப்படுகின்ற போதிலும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 59% ஆகக் காணப்படுவதாக மகாவலி நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலந்த தனபால தெரிவித்தார்.