அக்கரைப்பற்று பாடசாலையில் அதிபர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு – பெற்றோர் போராட்டம்


(நூருல் ஹுதா உமர்)


அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ பதுரியா வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாடசாலை பெற்றோர்கள் இன்று (08) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மொத்த அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் தற்போதைய அதிபர், அதே பாடசாலையில் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்திய பெற்றோர்கள், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் இடமாற்றம் செய்து அனுப்பப்பட்ட சாய்ந்தமருதை சேர்ந்த புதிய அதிபர் பாடசாலைக்கு வரக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள், கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாணவர் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் இடமாற்றம் வேண்டாம், அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் அதிபரை நீக்க வேண்டாம் போன்ற கருத்துப்பட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளும் போராட்டத்தில் காணப்பட்டன.

தற்போதைய அதிபரின் தலைமையில் பாடசாலையின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதாகவும், மாணவர் ஒழுக்கம் மற்றும் கூடுதல் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தூர பிரதேசத்திலிருந்து இங்கு வந்து கடமையாற்றுவது அந்த அதிபருக்கு கஷ்டமான ஒன்றாக இருக்கும் என்பதுடன் பாடசாலையில் முழுமையாக அவரால் அக்கறை செலுத்த முடியாத நிலை இருக்கிறது என்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், காரணமற்ற இடமாற்றம் பாடசாலையின் வளர்ச்சியை பாதிக்கும் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து உரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்தி தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.