கூட்டங்களில் உறுதியளிக்கப்பட்ட திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் திரேசகுமாரன் தெரிவிப்பு


(வவுணதீவு நிருபர்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு , பட்டிப்பளை பிரதேச சபையில் இவ்வாண்டில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிந்திருந்தாலும் அதனை செயற்படுத்தவும் திட்டங்களை முன் கொண்டு செல்லவும் எம்மிடம் போதுமான நிதி இல்லை என
மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இளையதம்பி திரேசகுமாரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையினால் குறித் தொதுக்கப்படும் நிதியினை எதிர்வரும் காலங்களில் அதிகரித்து தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலையில் வைத்து ஞாயிற்றுக் கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாங்கள் அபிவிருத்தி குழு தலைவரிடம் எமது பிரதேசபை எல்லைக்குட்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை செய்து தருமாறு கோரி யிருக்கின்றோம். அவர் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார் . இருந்த போதிலும் எமது பிரதேச சபை பல சவால்களுக்கு மத்தியில் இயங்கி வருகிறது குறிப்பாக எங்கள் சபையிலே தொழில் புரிகின்ற உத்தியோகத்தர்களுக்கு நாங்கள் பிரதேச சபையின் நிதிகளை அதாவது 2025ம் ஆண்டில் 20 வீதமும் 2026 இல் 40 வீதமும் வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். 

இந்த நிதி ஏறக்குறைய 26 மில்லியனுக்கு மேல் வழங்கப்படுகின்றது. இந்த நிதியினை மேன்மை தங்கிய ஜனாதிபதி எமக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டாலும் இதுவரையிலே அந்த ஏற்பாடுகள் எதுவும் நடை பெற்றதாக அறியவில்லை. அந்த நிதி எங்களுக்கு வழங்கப்படுமானால் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தை ஒரளவு கட்டியெழுப்புவதற்கு உதவியாக அமையும்.

எமது பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகனத்த வண்ணமே உள்ளன. கடந்த ஒக்டோபர் மாதத்தில் நடை பெற்றது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் புதிதாக யானை பாதுகாப்பு வேலி அமைப்பதாக அங்கு வருகை தந்த அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை. கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட இந்த யானை வேலி விடயத்தையும் இந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அதே போன்று பண்ணையாளர்களின் பிரச்சனை இன்று வரை தொடர்ந்த வண்ணமே உள்ளது. கால்நடைகளை பராமரிப்பதில் அவர்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
கடந்த அரசாங்கமும் இதற்கு தீர்வு பெற்றுத்தர வில்லை இந்த அரசாங்கமும் இதுவரை தீர்வு தரவில்லை. மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மேச்சல் தரைக்கான வரைபடங்களை எடுப்பதாகவும் அமைச்சரவை தீர்மானங்களை பெறுவதாகவும் கூறினார்கள் ஆனால் இதற்கும் முடிவு இல்லாத நிலை காணப்படுகிறது.

எனவே இந்த அரசாங்கம் எங்கள் மக்களின் கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் கூடிய விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.