நிதி மோசடிக்காரர்களிடம் இருந்து தப்புவதற்கான வழிகாட்டல்



சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியும் மோசடியான முறையில் மோசடிக்காரர்களின் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்ய வைப்பது தொடர்பாக நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக, வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவோ, பரிசுகள் விழுந்துள்ளதாகவோ மற்றும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் எனக் கூறி, பல்வேறு கணக்குகளில் மோசடியான முறையில் பணத்தை வைப்புச் செய்து கொள்வது தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி தனிநபர்களின் கணக்கு இலக்கங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்கள் (OTP) மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் மூலமும், இணைய இணைப்புகள் (Links) மற்றும் ஸ்கேன் குறியீடுகள் ஊடாகவும் இந்த மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் போல நடித்து, கணக்கு உரிமையாளர்களுக்குத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெற்று, அந்தக் கணக்குகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி கணக்கு உரிமையாளர்களை அச்சுறுத்தி, மோசடிக்காரர்களால் வழங்கப்படும் பல்வேறு கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்யும் மோசடிகள் குறித்து கடந்த நாட்களில் மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவிற்கும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக்கூறி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கணக்கு விபரங்கள் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தமை தொடர்பில் பாதுக்கை பொலிஸ் நிலையத்திற்கும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொலிஸார் முன்னைய சந்தர்ப்பங்களிலும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பொலிஸார் மேலும் அறிவிக்கின்றனர்.

Verified badges / உத்தியோகபூர்வ பக்கங்களை (official pages) பரிசோதித்தல்.

இரண்டாம் தரப்பினருக்கு வங்கிக் கணக்கு விபரங்கள் (Bank details), தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC Number), உள்நுழைவு விபரங்கள் (login details), OTP, கடவுச்சொல் (Password), PIN மற்றும் புகைப்படங்களை வழங்காமை.

சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளை (links) திறக்காதிருத்தல்.

நம்பகமான / உறுதிப்படுத்தப்பட்ட (Verified) கணக்குகளை மட்டும் பயன்படுத்துதல்.

பணத்தை வைப்புச் செய்யும்போது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளல்.

மோசடிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் குற்றப் பிரிவிற்கு (Cyber Crime Unit) உடனடியாக முறைப்பாடு செய்தல்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவு: 011-2852556

நிலையப் பொறுப்பதிகாரி / மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவு: 075-3994214

பிரதிப் பணிப்பாளர் / கணினி குற்ற விசாரணைப் பிரிவு: 011-2300638

தனிப்பட்ட உதவியாளர் / கணினி குற்ற விசாரணைப் பிரிவு: 011-2381375

நிலையப் பொறுப்பதிகாரி / கணினி குற்ற விசாரணைப் பிரிவு: 011-2381058