கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடம் இப்போதுதான் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. இதனை ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டும். ஜனாதிபதியுடன் இது குறித்துப் பேசியபோது, குறைபாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுடன் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதில் அர்த்தமில்லை என்பதை அவர் ஏற்றுக்கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்கின்றோம். ஏனெனில், எந்தவிதமான முறையான தயார்நிலையும் இன்றி இந்தச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இது அவசரகதியில் செய்யப்பட்ட ஒரு முயற்சியாகும். இதனால் கல்வி முறையில் பெரும் குழப்பம் ஏற்படும் அபாயம் காணப்பட்டது.
முதலாம் மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட மொடியுல் முறைமையிலான கல்வித் திட்டம் வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அதாவது முதலாம் தவணைக்காக மாத்திரமே தயாரிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான பாடத்திட்டங்கள் இன்னும் தயாரிக்கப்படவும் இல்லை, அச்சிடப்படவும் இல்லை.
ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு முழு ஆண்டிற்கான தெளிவான வழிகாட்டல் ஆசிரியர்களிடம் இல்லை. இச்சீர்திருத்தத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஐந்து முக்கிய தூண்கள் அவசியமாகும். அதில் மிக முக்கியமானது பௌதீக ரீதியான உள்கட்டமைப்பு வசதிகளாகும்.
டிஜிட்டல் கல்வி என்று கூறப்பட்டாலும், மாணவர்களுக்குத் தேவையான சாதனங்களோ அல்லது பாடசாலைகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளோ இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. உட்கட்டமைப்பு வசதிகளை ஆண்டின் நடுப்பகுதியில் தருவதாக அரசாங்கம் உறுதியளித்தது, ஆனால் வசதிகள் இல்லாமலே ஆண்டின் தொடக்கத்தில் சீர்திருத்தத்தைத் திணிப்பது மாணவர்களைப் பாதிக்கும்.
கல்விச் சீர்திருத்தம் என்பது மக்களின் கருத்துக்களை உள்வாங்கிச் செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தத் திட்டம் குறித்து யாரிடமும் கலந்துரையாடப்படவில்லை. செப்டம்பர் மாதம் வரை இது தொடர்பான முறையான ஆவணங்கள் கூட வெளியிடப்படவில்லை, மாறாக வெறும் விளக்கக்காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டன.
கல்வி அதிகாரிகளிடம் இப்போதுதான் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இது ஆரம்பத்திலேயே செய்திருக்க வேண்டிய ஒன்றாகும். ஜனாதிபதியுடன் இது குறித்துப் பேசியபோது, குறைபாடுகள் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களுடன் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதில் அர்த்தமில்லை என்பதை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார். மக்களின் நம்பிக்கையை வென்ற பிறகே இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அரசாங்கம் இக்காலத்தைப் பயன்படுத்தி பாடத்திட்டக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் மற்றும் சமூகத்துக்கு தெளிவான விழிப்புணர்வை வழங்கிய பிறகு அடுத்த ஆண்டு முறையாகச் சீர்திருத்தங்களைத் ஆரம்பிக்க வேண்டும் என்பதே எமது முக்கிய கோரிக்கையாகும் என்றார்.




.jpg)






.jpg)

