ஐ.ம.ச – ஐ.தே.க இணைவு காலத்தின் தேவையாகும் - நாமல் ராஜபக்ஷ


ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் இணைவை நாம் சுப செய்தியாகவே பார்க்கின்றோம். இது இந்நாட்டு அரசியலில் இடம்பெற வேண்டிய முக்கியமானதொரு விடயமாகும். கட்சிகள் இணைந்து கூட்டணிகள் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் இணைவு மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தவறிழைத்தாலும், அமைச்சர்கள் தவறிழைத்தாலும் அதிகாரிகளே பதவி விலக வேண்டும். ஆனால் கடந்த ஆட்சி காலங்களில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு காரணம் அரசியல்வாதிகள். இதுவே இந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.

ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தினால், குறித்த பொலிஸ் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இடமாற்றம் வழங்கப்படும்.

அவ்வாறு தான் தற்போது தரம் 6 ஆங்கிலப் பாடத்தொகுதி பிரச்சினையை பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு, தான் தப்பித்துக் கொண்டார். இவ்வாறு எல்லா துறைகளிலும் அதிகாரிகள் மீது குற்றஞ்சுமத்தி அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

உலக மாற்றத்துக்கு ஏற்ற வகையில் கல்வி மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் எமது கல்வி அமைச்சர் எவ்வாறான மாற்றங்களை எதிர்பார்க்கின்றார் என்பது எமக்குத் தெரியாது.

முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறியவர்கள் அதற்கு பதிலாக அவற்றை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் எதிர்காலத்தில் அதற்கு பதில் கூற வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காது சரியானவற்றை செய்ய வேண்டும்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய சகல நிவாரணங்களையும் வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம். அவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக எப்போதும் நாம் முன்னிற்போம்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் இணைவை நாம் சுப செய்தியாகவே நோக்குகின்றோம். இது இந்நாட்டு அரசியலில் இடம்பெற வேண்டிய ஒரு விடயமாகும். கட்சிகள் இணைந்து கூட்டணிகள் அமைக்கப்பட வேண்டும். ஏனைய அரசியல் கட்சிகளை பிளவடையச் செய்து, அவற்றை கவிழ்க்க வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கம் எமக்கு இல்லை. எமது நோக்கம் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை மீட்பதாகும். அரசாங்கமும் இதற்கு தயாராக வேண்டும்.

உலக அரசியலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நாடுகளுக்கிடையில் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்படுகின்றன. ஆனால் எமது அரசாங்கத்திடம் அவ்வாறு எந்த திட்டமிடலும் இல்லை. இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். இதனை தடுப்பதற்கு அரசாங்கம் நுட்பத்துடனும் முனைப்புடனும் செயற்பட வேண்டும் என்றார்.