தாய்லாந்து பிக்குவிடமிருந்து பணத்தை திருடிய சீன பிரஜை கைது


பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் இருந்த தாய்லாந்து பிக்கு ஒருவரிடமிருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (6) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (6) கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விமானத்திற்குள் வைத்து பிக்குவின் பணப்பை திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், பிக்குவுடன் அந்த விமானத்தில் பயணித்த சீன பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வாடகை வீட்டில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.