நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA,தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, 'ஓரியன்' (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும்.

இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட 'டிஜிட்டல் போர்டிங் பாஸ்' நாசாவால் வழங்கப்படும்.

இதற்கானப் பதிவுகள் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

சுமார் 10 நாட்கள் நீடிக்க உள்ள இந்தச் சோதனைப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆர்ட்டெமிஸ் II பயணமானது, மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.

இந்தக் குழுவினர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க மாட்டார்கள், ஆனால் அதை சுற்றி பறப்பார்கள். விண்வெளி ஆய்வில் பொதுமக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர்களை இணைக்கவும் நாசா இந்த 'போர்டிங் பாஸ்' முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான go.nasa.gov/49NQ4mf மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.