.jpg)
நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறு மழை வீழ்ச்சி அதிகரிக்கப்படும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் என நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே துறைசார் அதிகாரிகளால் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் எல்.எஸ்.சூரிய பண்டார தெரிவிக்கையில்,
பெரும்பாலான ஆறுகளின் நீர் மட்டங்கள் அபாய நிலைமையை விட குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அதே போன்று நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்களும் வழமையான அளவில் காணப்படுகின்றன. எனினும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் வான் கதவுகள் திறக்கப்படும். தற்போது 73 நீர்த்தேகங்களில் 25 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன என்றார்.
மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) நிலாந்த தனபால தெரிவிக்கையில்,
மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் 95 சதவீத நீர்மட்டம் காணப்படுகிறது. கொத்மலை நீர்தேக்கத்தில் 59 சதவீத நீர் மட்டமே காணப்படுகிறது. ஏனையவற்றில் 90 - 95 சதவீத நீர்மட்டம் காணப்படுகிறது. லொக்கல்ஓயா, ஹேபொல, மாதுருஓயா, களுகங்கை, கண்டலம், கலா ஓயா என்பவற்றின் நீர் மட்டம் சற்று அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் இது அபாய நிலைமையில் இல்லை என்றார்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ;ட நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவிக்கையில்,
கண்டி - உடுதும்பர, நுவரெலியா - நில்தண்டாஹின்ன, வலப்பனை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர இரண்டாம் நிலையின் கீழ் பதுளை - கந்தகெட்டிய, மாத்தளை - வில்கமுவ, நுவரெலியா - மதுரட மற்றும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், முதலாம் நிலையின் கீழ் பதுளை - மீகஹாகிவுல, னுணுகல, வெலிமட, பசறை, பதுளை மற்றும் ஹாலிஎல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், கண்டி - தொலுவ, மாத்தளை - அம்பன்கங்க கோரள, மொனராகலை - பிபில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு தொடர்பில் சுமார் 15 000 குடும்பங்கள் அதிக அபாயம் மிக்கவையாக இனங்காணப்பட்டுள்ளன. அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மக்கள் அவற்றை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றார்.
கடற்றொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் உதித கம்ஹே தெரிவிக்கiயில்,
மறு அறிவித்தல் வரை ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புக்களில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாள் மற்றும் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களிடம் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.








.jpg)



.jpeg)