கல்விச் சீர்திருத்தங்கள் போன்ற பாரிய பணிகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் மிகவும் சிறியது எனவும், அவர்கள் பேருந்து நிலையங்களுக்கு வர்ணம் பூசுதல் அல்லது சிறிய வீதிகளைப் புனரமைத்தல் போன்ற சிறிய வேலைகளையே செய்யத் தகுதியானவர்கள் எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சீர்திருத்தங்கள் மற்றவர்களுடையது என்றும், அதனைத் தமது கொள்கை என அரசாங்கம் காட்டிக்கொள்ள முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்.
இக்கல்விச் சீர்திருத்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டது என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை என தவறாகக் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் எதிர்ப்பு மற்றும் மகா சங்கத்தினரின் கடும் எதிர்ப்பு காரணமாகவே ஜனாதிபதி இன்று இந்த விடயத்தில் பின்வாங்கியுள்ளாரே தவிர, சரியான புரிதலுடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
நாட்டிற்குத் தேவையான மனிதாபிமானம் மிக்கவர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, வெறும் வேலைவாய்ப்பை மட்டும் இலக்காகக் கொண்ட நபர்களை உருவாக்கினால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என ரணவக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி கூறுவது போல இந்தப் புதிய சீர்திருத்தங்கள் மாணவர்களின் புத்தகப் பையின் பாரத்தைக் குறைக்காது, மாறாக அதனை அதிகரிக்கும் என அவர் எச்சரித்தார். அத்துடன், கல்வித் துறையில் சில புதிய கொள்கைகளைத் திணிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், குறிப்பாகப் பாலின விவகாரங்கள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவினரின் தேவைக்கேற்பக் கல்வியை மாற்றியமைக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் ஒரு சிறிய கட்சி என்ற கட்டமைப்பிற்குள் சிறைப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கல்விச் சீர்திருத்தம் போன்ற பாரிய விடயங்களைக் கையாளுவதற்கு அவர்களுக்கு முதிர்ச்சி போதாது என்றார். பேருந்து நிலையங்களுக்கு வர்ணம் பூசுதல், வீதி மற்றும் பாலங்களைப் புனரமைத்தல் போன்ற பணிகளை மட்டுமே அவர்களால் செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட அவர், இலவசக் கல்வியின் ஊடாக உருவானவர்கள் என்ற ரீதியில் இவ்வாறான கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சில தொழில்துறைகளை அழிப்பதற்கும் தேசப்பற்றற்ற ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கும் சூழ்ச்சிகள் செய்யப்படுவதாக அவர் சந்தேகம் வெளியிட்டார். எமக்குத் தேவையானது தேசப்பற்றற்ற 'முயல்களை' அல்ல, மாறாக தேசப்பற்றுள்ள ஒரு தலைமுறையே என்று கூறிய அவர், எதிர்வரும் மாதங்களில் மிகவும் உயர்தரமான கல்விச் சீர்திருத்தத் திட்டமொன்றைத் தமது கட்சி முன்வைக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.
இதேவேளை, வைத்தியர் ஷாஃபிக்கு அநீதி இழைக்கப்பட்டதை இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிபுணத்துவத் துறைகளில் உள்ளவர்கள் அரசியலுக்காகத் தமது தொழிலைக் காட்டிக்கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தினார். அத்துடன், பௌத்த பிக்குகளுக்கும் பெண்களுக்கும் இழைக்கப்படும் அவமதிப்புகளைத் தற்போதைய அரசாங்க உறுப்பினர்களும் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், பிக்குகளுக்கு எதிரான ஒழுக்கக் கோவைகள் தொடர்பில் மகா சங்கத்தின் நிக்காயக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
லால்காந்த மற்றும் நளிந்த ஜயதிஸ்ஸ போன்றவர்கள் பிக்குகளை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதாகவும், ஒருவேளை பௌத்த பிக்கு அல்லாத வேறொரு மதப் போதகருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டிருந்தால் அனைவரும் மன்னிப்புக் கேட்டிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலைச் சம்பவத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் தமக்குத் தடையுமில்லை என்றும், ஆனால் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காத்தமை ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இறுதியாக, 'Re-building Sri Lanka' செயற்திட்டத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




.jpg)






.jpg)

