கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் !


கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்கள் இன்று காலை 8 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அந்த விசாரணை சுயாதீனமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த, குறித்த அதிகாரியை பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரி கடந்தவாரம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி தற்காலிகமாக அந்த பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் சுகாதார அமைச்சு எவ்வித சாதகமான பதிலையும் வழங்காத காரணத்தினால், இன்று காலை முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.