ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு !



உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும் ஆரம்ப நிலையில் குணப்படுத்துவதற்கும் இயலும் என்றாலும், சமமற்ற சுகாதார அணுகுமுறைகள் காரணமாக பல உயிரிழப்புகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னெடுத்துள்ள கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக பேசிய ஜீனெட் என்ற பெண், “என் உடலே என்னை ஏமாற்றியது போல உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் என கண்டறியப்பட்ட ஒரு ஆண்டுக்குள் அவர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை புற்றுநோய் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் உள்ள கர்ப்பப்பையில் உருவாகும் புற்றுநோய் ஆகும். ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால், இது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 6.6 இலட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டதுடன், 3.5 இலட்சம் பெண்கள் இதனால் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனம், இந்த நோயால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் உயிரிழக்கிறார் என எச்சரித்துள்ளது.

காரணம் என்ன?

கர்ப்பப்பை புற்றுநோய் பெரும்பாலும் HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்றுடன் தொடர்புடையது. இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் மிகப் பொதுவான வைரஸ் ஆகும்.

பாலியல் செயலில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது HPV வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம். பெரும்பாலும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை தானாகவே நீக்கிவிடும். ஆனால் சில வகை HPV தொற்றுகள் நீடித்தால், அசாதாரண செல்கள் உருவாகி பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது.

தடுப்பு மற்றும் சிகிச்சை

கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் கூடிய நோயாகும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தில் பரிந்துரைகளின் படி, 9 முதல் 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் HPV தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதுடன் 30 வயதிலிருந்து பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக HIV தொற்றுள்ள பெண்களுக்கு 25 வயதிலிருந்து கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.

ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இது மிகவும் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய முயற்சி

2020 ஆம் ஆண்டு, 194 நாடுகள் இணைந்து கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய திட்டத்தை தொடங்கின. அந்த நாள், நவம்பர் 17, தற்போது உலக கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு நாள் ஆகக் கடைபிடிக்கப்படுகிறது.

2030க்குள் அடைய வேண்டிய இலக்குகள்:

* 15 வயதிற்குள் 90% சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி

* 35 மற்றும் 45 வயதுகளில் 70% பெண்களுக்கு பரிசோதனை

* நோய் கண்டறியப்பட்ட 70% பெண்களுக்கு முழுமையான சிகிச்சை

இந்த இலக்குகள் நிறைவேற்றப்பட்டால், 2120 ஆம் ஆண்டுக்குள் 7.4 கோடி புதிய நோய் சம்பவங்களைத் தவிர்க்கவும், 6.2 கோடி உயிர்களை காப்பாற்றவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகிய சர்வதேச அமைப்புகள், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகளை சமமாக அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.