பெரியம்மாவை கத்தி முனையில் மிரட்டி பணத்தை கொள்ளையிட்ட மகன் கைது


களுத்துறை - மில்லனிய பிரதேசத்தில் 2026.01.15 அன்று 60 வயதுடைய தனது பெரியம்மாவை கத்தி முனையில் மிரட்டி 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற மகன் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (20) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான மகன் வாதுவையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 490,000 ரூபா பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 60 வயதுடைய பெண்ணின் உறவினர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.