மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு



மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மீட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.