தேசிய கண் வைத்தியசாலையில் வைத்தியர் இடமாற்றம் முறையற்றது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கண்டனம்


தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை சேவைகளை நடத்திச் செல்வதற்கு மேலதிக வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது கடமையாற்றி வரும் வைத்தியர்களை இடமாற்றுவது முறையற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சாடியுள்ளது.

இந்தத் திட்டமிட்ட வெளியேற்றத்தால் சத்திரசிகிச்சைகள் முடங்கி, அப்பாவி நோயாளிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வர் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவிக்கையில்,

"பத்து வருடங்களுக்கு முன்னர் 2015 - 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேசிய கண் வைத்தியசாலையின் மனிதவளத் தேவையைக் கருத்திற்கொண்டு 121 வைத்தியர்களை நிர்ணயித்துள்ளனர். தற்போது அதற்கும் அதிக எண்ணிக்கையிலான வைத்தியர்கள் அங்கு பணியாற்றி வருவதாகச் சுகாதார அமைச்சர் தெரிவிக்கிறார். எனினும், குறித்த வைத்தியசாலைத் தரவுகளுக்கமைய ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வைத்தியர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேசிய கண் வைத்தியசாலையில் புதிய அலகுகளும், நவீனமயப்படுத்தப்பட்ட பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. எனினும், குறித்த சிகிச்சைகளை வழங்கும் தேவைக்கேற்ப வைத்தியர்கள் பணியமர்த்தப்படவில்லை. பழைய நிர்ணயத்தையே செயற்படுத்தி வருகின்றனர். அதில் எவ்வித மாற்றங்களையும் கொண்டு வரவில்லை. வைத்தியசாலையில் கடமையில் உள்ள 15 பேர் விடுமுறையில் சென்றுள்ளனர். அதற்கமைய 106 பேர் பணியாற்றி வருவதுடன் அவர்களில் 65 பேருக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்கையில், மேலும் 2 வைத்தியர்களை இடமாற்றம் செய்ய அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். அத்தோடு சந்துஷ்ட என்ற வைத்தியரையும் அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்து வருகிறார். குறித்த வைத்தியர் பணிபுரியும் அலகில் சத்திரசிகிச்சைக்காக 2500-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். வைத்தியரை வெளியேற்றுவதால் அப்பாவி நோயாளர்களின் சிகிச்சைகள் முடங்கக்கூடும்.

இந்நிலையில் தேசிய கண் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, வைத்தியசாலையை நடத்திச் செல்வதற்கு குறைந்தபட்சம் 179 வைத்தியர்களாவது வேண்டும் எனச் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனின் கடமையில் உள்ள வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கியது ஏன்? அரசியல் நோக்கத்திற்காகவே அவ்வைத்தியர் இவ்வாறானதொரு செயலைச் சுகாதார அமைச்சரின் கூற்றையும் மீறிப் பணிமாற்றம் செய்துள்ளார்" என்றார்.