சீர்திருத்தம் என்ற பெயரில், இலவசக் கல்வியில் பொருத்தமற்ற பாலியல் கற்பிதங்களைப் புகுத்தி, அதனை திரிபுபடுத்துவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - சஜித் பிரேமதாச !


சீர்திருத்தம் என்ற பெயரில், இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற பாலியல் கற்பிதங்களைப் புகுத்தி, அதனை திரிபுபடுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அது இன்றைய காலத்திற்கேற்றாற் போல் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்தக் கல்வி முறைமையானது நவீனத்துவம் மற்றும் புத்தாக்க ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு உட்பட பாரிய புரட்சிகர தொழில்நுட்ப மாற்றங்கள் மிக விரைவான வேகத்தில் நடைபெற்று வரும் ஒரு தருணத்தில், இந்த மாற்றங்களுடன் நாம் மாறவில்லை என்றால், பல தசாப்தங்களுக்கு பின்தங்கிய ஒரு நாடாக நாம் மாறுவோம்.

அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்தின் உண்மையான பலன்களை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. நமது நாட்டின் கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். உலகில் கல்வி முறை மாறுவதற்கு முதல், நாம் முன்னணியில் இருந்து நமது நாட்டில் இலவசக் கல்வியில் மாற்றங்களை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால்,இலவசக் கல்வி தரம் குறைந்து, தனியார் மற்றும் வெளிநாட்டுக் கல்வி உயர்ந்த மட்டத்துக்கு வரும்.

இந்த இலவசக் கல்வியை மாற்றியமைக்கும் செயல்முறையில், நமது மரபு, நமது நாட்டின் நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வரலாறுப் பாடத்தைக் கட்டாய பாடமாக ஆக்க வேண்டும். ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் போலவே, நாம் மூலத்தை மறந்துவிடக் கூடாது. நாகரிகம் மற்றும் விழுமியங்களை நாம் மறந்து விடக்கூடாது.

நமது நாட்டுக்கு தனித்துவமான கலாச்சாரமொன்று காணப்படுவதனால், இந்த மாற்றங்களை நாகரிகத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும். இந்த கலாச்சார வடிவத்தினுள் நவீனத்துவத்தை இணைத்துக் கொள்ள வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் இலவசக் கல்வியில் மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற பாலியல் கற்பிதங்களைப் புகுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலவச கல்வி என்ற போர்வையில் இதனை திரிபுபடுத்த வேண்டாம். இதற்கு வேறு கற்பிதங்களை உட்புகுத்த வேண்டாம். இது எந்த வகையிலும் நமது நாட்டுக்கு பொருந்தாது. இந்த நாகரிகமற்ற முறைமைகள், நமது நாட்டைக் கையேற்கப் போகும் எதிர்கால சந்ததியினரை முற்றிலுமாக சீரழிக்கும் செயல்களாகும்.

நாம் புதிய விடயங்களை உட்சேர்பது போல, புத்தாக்கத்தை உட்சேர்பதைப் போல, நவீன தொழில்நுட்பத்தின் பெயரால் கல்வி முறையில் பொருத்தமற்ற பாலியல் விடயப்பரப்புகளை புகுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த பாலியல் கல்வியை உட்புகுத்த வேண்டும் என்று கூறும், நமது நாட்டில் இலவசக் கல்வியை சீரழிக்கும் சதித்திட்டத்திற்கு காரணமான தரப்பினரை வெளிக்கொணர வேண்டும்.

கோடிக்கணக்கான ரூபாக்களை ஒதுக்கிய போதிலும், அச்சிடப்பட்ட புத்தகங்களில் பக்கங்களைக் கிழித்து பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

கல்வி மிகவும் முக்கியமானது என்பதால், கல்வி ஒரு நாகரிக மிக்க தலைமுறையை உருவாக்குகிறது. அது படித்த மக்களையும், அறிவும் புத்திசாலித்தனமும் நிறைந்த சமூகத்தையும் உருவாக்குகிறது என்று புத்தர் கூட சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இப்போது கல்வி முறையில் எமது கலாசரத்தை சீரழிக்கும், மனித வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.