அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது. 88 மற்றும் 89 கால சூழலை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்க கூடாது. சிறையில் அடைத்தாலும் எமது அரசியல் பயணம் தொடரும். தேசியத்தை முன்னிலைப்படுத்திய அரசாங்கத்தை நிச்சயம் ஸ்தாபிப்போம். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
அநுராதபுரத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த காரணத்தால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு செல்கிறார். அச்சமில்லமல் காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுகிறார். இதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசியல் கட்சி என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டோம். அதனால் தான் எமது அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. தவறுகளை திருத்திக் கொண்டுள்ளோம். ஆகவே இனிவரும் காலங்களில் சிறந்த முறையில் அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்.
தேசியத்தை முன்னிலைப்படுத்தியே நாங்கள் ஆட்சியமைப்போம். தேசியத்துக்காக குரல் கொடுப்பவர்கள் எம்முடன் இணையலாம்.இந்த அரசாங்கம் தேசியத்துக்கு எதிராகவே செயற்படுகிறது.
பல்வேறு காரணிகளால் கடந்த காலங்களில் பொதுஜன பெரமுனவை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம்.அனைவரையும் இணைத்துக் கொண்டு பயணிக்கவே எதிர்பார்க்கிறேன்.
அரசாங்கம் அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது. 88 மற்றும் 89 ஆண்டு காலப்பகுதிகளில் செயற்பட்டதை போன்று இனி செயற்பட முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். சிறையில் அடைத்தாலும் எமது அரசியல் பயணம் தொடரும் என்றார்.












.jpeg)
%20(1).jpg)