அர்ச்சுனா எம்.பியின் அவதூறு பிரசாரங்களுக்கு தற்காலிக தடை !



யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பில் பொது வெளியில் அவதூறு பிரசாரங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதனுக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரின் அனுமதியின்றி அவரது அலுவலகத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தமக்கு அவதூறு ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக, வைத்தியசாலைப் பணிப்பாளர் யாழ்.நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரனும் எதிராளி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் ஆஜராகினர்.இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில்,வழக்கு முடிவுறும் வரையாழ்,போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செயற்படுவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.