சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் - சரத் வீரசேகர
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர் திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது.
திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது.
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார்.












.jpeg)
