கல்வி மறுசீரமைப்பை சீர்குலைப்பதற்காக எதிர்க்கட்சியினர் பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் அரசாங்கம் எந்த வகையிலும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையில் பின்வாங்காது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கல்வி மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கு முன்னர் நாங்கள் கலந்துரையாடல்களை முன்னெடுத்த போது, அப்போதிருந்தே எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை கூறி அதனை விமர்சிக்க ஆரம்பித்தனர். முதலில் மதம், வரலாறு என்று கூறி திரிபுபடுத்திய விடயங்களை கூறி வந்ததுடன், புத்தகத்தின் நிறம் பற்றியும் தவறான கீழ்த்தரமான கருத்துக்களை பரப்பினர். இந்த விடயத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் கருத்துக்களை தெரிவிக்கும் போது, அதனை பொறுப்புடன் கூற வேண்டும். பௌத்த பாடப்புத்தகத்தில் தர்ம சக்கரத்திற்கு பதிலாக அசோக சக்கரம் உள்ளதாக கூறினார். இதில் மதத்தை தொடர்புபடுத்துவது கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே இவ்வாறாக பொய்களை கூறினர். ஆனால் காலம் காலமாக பயன்படுத்தும் சின்னமே பாடப்புத்தகத்தில் உள்ளது. அதில் மாற்றம் செய்யப்படவில்லை. கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்படுவதற்கான எதிர்க்கட்சியின் அரசியல் சூழ்ச்சியே அது. அதற்காக பல்வேறு கருத்துக்களையும் பொய்களையும் கூறுகின்றனர்.
கல்வி மறுசீரமைப்பானது எதிர்கால எமது பிள்ளைகளுக்காக செய்யப்படும் நடவடிக்கையாகும். ஆங்கில பாடப்புத்தகத்தில் தவறான இணையத்தள முகவரியொன்று மட்டுமே உள்ளது. இதனையே இவர்கள் உதாரணமாக எடுத்து செயற்படுகின்றனர். ஆனால் இது அரசியல் சூழ்ச்சிகளுடன் நடந்ததா? என்று ஆராயப்படுகின்றது. கல்வி மறுசீரமைப்பை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். இதற்காக பல காரணங்களை கூறுகின்றனர். எதிர்க்கட்சியினர் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்குலைக்க சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்.
நாங்கள் கல்வி மறுசீரமைப்பில் அமைச்சரவையில் தீர்மானத்தை எடுத்தோம். சகல பிள்ளைகளுக்கும் முறையான கல்வியை வழங்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆனால் எதிர்க்கட்சியினர் அவ்வாறான எண்ணத்தில் செயற்படவில்லை.
ஒரு குழுவொன்றே இவ்வாறு செயற்படுகின்றது. எதிர்க்கட்சியில் சில கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடவில்லை. இப்போது அந்த பிரேரணையை மேசை பெட்டகத்தில் வைத்திருக்கின்றனர். எவ்வாறாயினும் நாங்கள் கல்வி மறுசீரமைப்பை கொண்டுவருவதற்காக மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளோம் அதனை நிச்சயமாக முன்னெடுத்து செல்வோம் என்றார்.












.jpeg)
