அரசியலமைப்புப்பேரவையிலிருந்து இராஜினாமா செய்யுமாறு சிறிதரனைப் பணிக்க தீர்மானம் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் ஏகோபித்த முடிவு



சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலமைப்புப்பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரனை அதிலிருந்து இராஜினாமா செய்யுமாறு பணிப்புரை வழங்குவதற்கு கட்சியின் அரசியல் குழு தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது அரசியல் குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை பி.ப 2 - பி.ப 4.30 மணி வரை வவுனியாவில் நடைபெற்றது.

கட்சித்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசியல் குழு உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம், எஸ்.குகதாசன், இரா.சாணக்கியன், துரைராஜசிங்கம் மற்றும் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் எஸ்.சிறிதரன் மற்றும் குலநாயகம் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.

இக்கூட்டத்தின்போது சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலமைப்புப்பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், பேரவையில் செயற்படும் விதம் குறித்து அண்மையில் சர்ச்சைக்குள்ளான விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது.

அதன்படி இழப்பீட்டுக்கான அலுவலக உறுப்பினர், கணக்காய்வாளர் நாயகம், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் என்பன உள்ளடங்கலாக இதுவரையில் இடம்பெற்ற 8 நியமனங்கள் தொடர்பான வாக்களிப்பின்போது சிறிதரன் அரசாங்கத்தரப்புடன் இணைந்து வாக்களித்திருப்பதாகவும், அவற்றில் சிலர் முன்னாள் இராணுவ மற்றும்பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் எனவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதுமாத்திரமன்றி இதற்கு முன்னைய சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்தமை தொடர்பில் சிறிதரனிடம் விளக்கம் கோரப்பட்ட நிலையில், அத்தகைய செயற்பாடுகள் தொடர்வதாகவும் கரிசனை வெளியிடப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு பணிப்புரை விடுத்து சிறிதரனுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைப்பதென அரசியல் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.