ஹெரோயின் விற்பனை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை



83 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பொரள்ளை பகுதியில் 83.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரால் இந்த பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், பிரதிவாதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பிரதிவாதிக்கு முன்னைய குற்றப்பதிவுகள் காணப்படுவதாகவும் வழக்குத் தரப்பினரால் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.