மின் கட்டணத்தை 13.56% அதிகரிக்க மின்சார சபை யோசனை !


2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) மின்சாரக் கட்டணங்களை திருத்தியமைப்பதற்கான உத்தியோகபூர்வ யோசனையை இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.

தமது செலவுகளை ஈடுகட்டுவதற்காக 13.56% கட்டண அதிகரிப்பை மின்சார சபை இவ்வாறு கோரியுள்ளது.

மின்சார சபையின் மதிப்பீட்டின்படி, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான மொத்தச் செலவு ரூ. 136,531 மில்லியன் ஆகும். எனினும், தற்போதைய கட்டணங்களின்படி எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூ. 116,889 மில்லியன் மட்டுமே என்பதால், சுமார் ரூ. 15,847 மில்லியன் நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதி இடைவெளியை நிரப்பவே கட்டண உயர்வு கோரப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி மற்றும் பொருளாதார காரணிகள்
இக்காலப்பகுதியில் நீர் மின் உற்பத்தி மூலம் 1,218 GWh மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அனல் மின் உற்பத்தி மூலம் 1,957 GWh மின்சாரத்தைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.எரிபொருள் விலை: ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் ரூ. 277, ஒரு லீற்றர் பர்னஸ் எண்ணெய் ரூ. 168 மற்றும் ஒரு கிலோ நிலக்கரி ரூ. 39.53 என்ற விலை அடிப்படையிலேயே இந்தக் கட்டணத் திருத்தம் கணக்கிடப்பட்டுள்ளது.
பரிமாற்ற வீதம்: அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு ரூ. 313.52 என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகச் செலவுகள்
மின்சார சபையின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், தன்னார்வ ஓய்வுபெறும் திட்டத்திற்காக (VRS) சுமார் ரூ. 1,518 மில்லியன் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அச்செலவு தற்போதைய கட்டணத் திருத்தத்தில் உள்ளடக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, 2026 முதல் காலாண்டிற்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த கட்டண அதிகரிப்பு கோரிக்கையை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது. உரிய காலக் கெடுவிற்கு முன்னதாக அதனை சமர்ப்பித்திருக்கவில்லையென அதற்கான காரணம் என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.