இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், புதுடெல்லியில் நடைபெறவுள்ள “இந்தியா AI தாக்கம் உச்சிமாநாடு 2026” (India–AI Impact Summit 2026) இல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான ஒத்துழைப்பில் இந்தியாவின் அணுகுமுறையை வரையறுக்கும் மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் (People, Planet and Progress) ஆகிய மூன்று முக்கிய சூத்திரங்களை (Sutras) அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்தச் சர்வதேச மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புத்தாக்க சிந்தனையாளர்கள் ஒன்றுகூடவுள்ளனர். இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து பின்வரும் முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்:
* பிரான்ஸ்: ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்.
* பிரேசில்: ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா.
* பூட்டான்: பிரதமர் ஷெரிங் டோப்கே.
* ஸ்பெயின்: ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ்.
* ஐக்கிய அரபு அமீரகம்: அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்.
* மொரிஷியஸ்: பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலம்.
இவர்களைத் தவிர பின்லாந்து, கிரீஸ், எஸ்தோனியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் தலைவர்களும் இப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சுமார் 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் தலைமையிலான குழுக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளன.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவின் எதிர்கால நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.





.jpeg)






.jpeg)
