ஜப்பான் - இலங்கை ஆகிய இருநாடுகளின் நீண்டகால நட்பு உறவை உறுதிப்படுத்திய ஜப்பான் பேரரசர் பிறந்தநாள் விழா


ஜப்பான் பேரரசரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் 2026 பெப்ரவரி 25 ஆம் திகதி சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வு தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். முன்னாள் ஜனாதிபதிகள், சபாநாயகர், அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வரவேற்பு நிகழ்வை தலைமையேற்ற ஜப்பான் தூதர் இசொமதா, தனது உரையில் 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று கடைசி இடத்தைப் பெற்ற இலங்கை தடகள வீரர் திரு ரணதுங்க கருணாநந்தாவின் உறுதியையும் மனவலிமையையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை பொருளாதார மீட்சியுடன் நிலையான முன்னேற்றத்தை அடைந்து வருவதை பாராட்டிய அவர், குறிப்பாக BIA (பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்) விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட மீண்டும் தொடங்கப்பட்ட யென் கடன் திட்டங்கள் சிறப்பாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.

“பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்புகளை விரைவில் காண்போம்,” என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக உரையாற்றிய அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜப்பான் பேரரசருக்கு நீண்ட ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், ஜப்பான் மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்து, முதலீடு, அபிவிருத்தி உதவி, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான பிணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் கொண்டிருக்கும் நீண்டகால உறவை வலியுறுத்தினார். விழாவில் பங்கேற்றவர்கள், ஜப்பானிய பாரம்பரிய கலாச்சார அம்சங்களை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

இகெபானா (ஜப்பானிய மலர் அலங்காரம்), பெண்கள் விழாவைக் குறிக்கும் ஹினா-நிங்யோ பொம்மைகள், சிறுவர் விழாவைக் குறிக்கும் யோரோய்-கபுடோ (சாமுராய் தலைக்கவசம் மற்றும் கவசம்), கராத்தே நிகழ்ச்சி மற்றும் பல்வேறு வகையான ஜப்பானிய சகே ருசித்தல் போன்ற நிகழ்வுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

இந்த வரவேற்பு நிகழ்வு, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், புதிய நட்புகளையும் எதிர்கால ஒத்துழைப்புகளையும் உருவாக்கும் மேடையாக அமைந்தது.