2026 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்த விபரங்களை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள் மற்றும் நடைமுறைகள்
இந்த ஆண்டில் கிராம அலுவலர்கள் வீடுகளுக்கு நேரடியாக வருகை தந்து விபரங்களைச் சேகரிக்க மாட்டார்கள்.
2025 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்படாதவர்கள் அல்லது 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்கள் 2026/ER படிவத்தைப் பூரணப்படுத்தி கிராம அலுவலரிடம் கையளிக்க வேண்டும்.
பொதுமக்கள் www.elections.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக இணையவழியாகவும் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
வாக்காளர் விபரங்களைச் சரிபார்த்தல்
தமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை பொதுமக்கள் பின்வரும் வழிகளில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்:
கிராம அலுவலர் அலுவலகங்கள் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்குச் செல்லுதல்.
ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் செல்லுதல்.
ஊடக அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை (Scan) ஸ்கேன் செய்தல்.
இ - சேவைகள் (E-Services)
"டிஜிட்டல் பங்கேற்பினூடாக ஜனநாயகத்தைப் பலப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் கீழ் வாக்காளர் பதிவு, விபரங்களைச் சரிபார்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்ற பல சேவைகள் https://eservices.elections.gov.lk ஊடாக வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் சுமார் 80 இலட்சம் பேர் இந்த டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தித் தமது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.












.jpeg)
