மட்டக்களப்பில் யானை நடமாட்டம் அதிகரிப்பு: மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மு. அருட்செல்வம் விடுத்துள்ள அவசர கோரிக்கை


யானைகளை அவற்றுக்குரிய வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடுவதே தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமானதாகும் என மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மு. அருட்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் விவசாயிகள் யானைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும், தற்போது வேளாண்மை அறுவடை முடிவடைந்த நிலையில், யானைகளின் நடமாட்டம் ஊருக்குள் பெருமளவில் அதிகரித்துள்ளது.


எனவே, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இதில் தனிப்பட்ட ரீதியில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். எதிர்வரும் நாட்களில் இந்த யானைகளை முறையாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதன் மூலம், பொதுமக்கள் அச்சமின்றித் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


அதேவேளை, இப்பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் அவர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளை முறையான பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் கால்நடைகள் களவாடப்படுவதைக் குறைத்துக்கொள்ள முடிவதுடன், வீதிகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளையும், அதனால் மனித உயிர்கள் பலியாவதையும் தடுத்து நிறுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.