ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும் - அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் !


ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது எமது பொறுப்பாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகத்துடன் இணைந்த கள உத்தியோகத்தர்களுக்காக திங்கட்கிழமை (9) பத்தரமுல்லை "சுஹுருபாய" வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சிப்பட்டறையில் அமைச்சர் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தற்போது இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர் உப குழுக்கள் நிறுவப்பட்டு வரும் நிலையில், களத்தில் செயற்படும் பெண்கள் மற்றும் பெண்களுக்காக இயங்கும் நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து இதன்போது உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி அமைச்சர் சரோஜா சாவித்திரி மீளாய்வு செய்தார்.

பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு, நாம் வழங்கும் சேவைகளை மேலும் தரமுயர்த்தி பொதுமக்களுக்கு மிக நெருக்கமான சேவையாக மாற்றுவது அவசியம் என்பதையும் அவர் இதன்போது மேலும் விளக்கினார்.

இந்தப் பயிற்சிப்பட்டறையில் விடயப்பரப்பு சார்ந்த அறிவை வழங்குவதற்கும் மேலதிகமாக, உத்தியோகத்தர்களின் திறன் விருத்திக்கான விரிவுரைகளும் செயற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆளுமை வளர்ச்சிப் பயிற்சி ஆலோசகர் உதயா தேவமுல்ல மற்றும் தமித் நந்தன குரே ஆகியோர் இந்தப் பயிற்சிப் பட்டறையில் வளவாளர்களாகப் பங்களிப்பு வழங்கினர்.

மேலும் இதில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, இலங்கை மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் ஜி.ஐ. சஜீவனி பெரேரா மற்றும் இலங்கை மகளிர் பணியகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி கள உதவி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.