அம்பிலாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன் கருதி, அபயம் (ABAYAM) அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பணிமனை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று (28.02.2026) அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றிலிருந்து வருகை தந்த சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்கினர். இதன் ஒரு கட்டமாக முன்னெடுக்கப்பட்ட கண் மருத்துவப் பிரிவில் கண்பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையுடைய 161 நபர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், தொற்றா நோய் (NCD) பரிசோதனைப் பிரிவில் 147 நோயாளர்கள் பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டன. இவை தவிர, குழந்தை நல மருத்துவம் (Pediatrics), காது மூக்கு தொண்டை (ENT) மருத்துவம் மற்றும் பொது மருத்துவப் (General Medicine) பிரிவுகளின் கீழ் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.






















