
ஜப்பான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நாடுகளில் ஒன்று. தற்போது ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் மத மரபுகளுடன் நவீன தொழில்நுட்பத்தை இணைத்துள்ளனர்.
ஜப்பானில் சுமார் 83 முதல் 87 மில்லியன் மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகின்றனர். இது அந்த நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 46 சதவீதமாகும். ஆனால் பலர் புத்த மதத்தை ஒரு மதமாக மட்டும் அல்லாமல், பாரம்பரிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர்.
இதனால் ஜப்பானில் பல புத்த கோவில்களில் துறவிகள் குறைவாக உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் மனித உருவ ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரோபோவை கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். மேலும் டெராவர்ஸ் மற்றும் XNOVA போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதில் பங்களித்துள்ளன.
‘புத்தராய்டு’ என பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சமீபத்தில் கியோட்டோவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஷோரன்-இன் கோவிலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு சாதாரண துறவியைப் போலவே இது மக்களுக்கு ஆன்மீக ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவின் செயல்பாட்டு மையம் ‘புத்தபோட்-பிளஸ்’ எனப்படும் அமைப்பாகும். இது ChatGPT போன்ற ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.












