Truth Social தளத்தில் சனிக்கிழமை (28) வெளியிடப்பட்ட வீடியோவில் கருத்து வெளியிட்ட டிரம்ப், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஈரான் மக்கள் தங்களது அரசாங்க அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
“நாங்கள் எங்கள் பணியை முடித்ததும், உங்கள் அரசாங்கத்தை நீங்கள் கைப்பற்றுங்கள். அது உங்களுடையதாக மாறும். தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இதுவாகும்” என்று ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் செய்யத் துணியாத நடவடிக்கையை தாம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், பல ஆண்டுகளாக ஈரான் மக்கள் அமெரிக்க உதவியை எதிர்பார்த்திருந்தாலும் அது கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
“இன்று செய்யத் துணிந்ததை செய்ய எந்த ஜனாதிபதியும் தயாராக இல்லை. இப்போது உங்களுக்கு விரும்பியதை வழங்கும் ஒரு தலைவர் கிடைத்துள்ளார். நீங்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள் என்பதை பார்ப்போம்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும் அவர், ஈரான் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மிகப்பெரிய வலிமையுடன் நிற்கும் என்றும், தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க இது சரியான தருணம் என்றும் கூறினார்.
தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் “Lion’s Roar” என்ற பெயரில் முன்னெடுக்கப்படுவதாகவும், அமெரிக்க தரப்பில் இது “Operation Roaring Lion” என அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களின் நோக்கம் ஈரானின் இராணுவ இலக்குகளை அழிப்பது மட்டுமல்லாமல், அரசியல் ஆட்சி மாற்றத்தையும் (Regime Change) நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC) மற்றும் காவல்துறையினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும்; இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.













