ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கானதா? பெற்றோர்களுக்கானதா?


ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கானதா? பெற்றோர்களுக்கானதா?

வளமான வாழ்வக்கு வழி காட்டுவது கல்வி. எவராலும் சூறையாடப்பட முடியாதது. ஒருகாலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாதது கல்வி. இதனைத்தான் “கேடில் விழுச்செல்வம் கல்வி” என்று எம்முன்னோர் கல்வியைப் போற்றினர். உலகத் திருமறை தந்த வள்ளுவப் பெருந்தகையும் “ கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க தற்குத் தக” என்றார்.

இந்தவகையில் நோக்கும்போது கல்விதான் ஒரு மனிதனை முழுமையாக்கும். அங்கமெல்லாம் தங்கம் போல் தானிருந்தும் கல்வி கற்காதவனை இருவிழி இருந்தும் குருடன் என்றனர் எம்முன்னோர். இதனால் தான் இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்று கூறினர். இளமையில் கற்கும் கல்விதான் சிறப்பாக மனதில் நிலைத்து நிற்கும். இதற்காகத்தான் உலகம் முழுவதும் ஆரம்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

இலங்கையில் வலுவடைந்து வரும் ஆரம்பக்கல்வியில் முன்பள்ளிக் கல்வி முக்கியமானதாகும். ஒரு பிள்ளை பிறந்து மூன்று வயதானதும் அப்பிள்ளையை முன் பள்ளிகளிலே சேர்த்து விடுவதுண்டு. இந்த முன்பள்ளிகள் எழுத்தையோ, எண்ணையோ கற்பிக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுவதில்லை. அதாவது ஐந்து வயது முடிவில் ஆரம்பமாகும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆரம்பக் கல்வியை வழங்குவதற்கு அரச பாடசலைகளும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் தயாராகவே உள்ளன.

முன்பள்ளி அல்லது பாலர் பாடசாலைகளுக்கும் இன்று ஓரளவு அரச மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றது. இங்கு இணைத்துக் கொள்ளும் பிள்ளைகளை மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆடல், பாடல் முதலான விளையாட்டுச் செயல்களில் ஈடுபடுத்தி அவர்களின் உடல், உள விருத்திக்கு உறுதுணை வழங்கப்படுகின்றது. இரண்டு வருடங்கள் பாலர் பாடசாலைக் கல்வியைக் கற்று நிறைவு செய்தவர்கள் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்படுவர்.

தரம் ஒன்றுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படும்போது முன்பள்ளியில் கற்றிருப்பது தகுதியாகக் கருதப்படமாட்டாது. சில பிரதேசங்களில் முன்பள்ளிக்குச் செல்லாத பிள்ளைகளும் இருப்பர். தரம் ஒன்று வகுப்பிலே அவர்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இதை விட உரிய வயதில் தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்ளப்படாத மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை சிறப்புற வழங்க வேண்டியது அவர்களை இணைத்துக் கொள்ளும் பாடசாலைகளின் கடமையாகும்.

ஆரம்பக்கல்வி என்பது தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான தரங்களை உள்ளடக்கியது. இதிலும் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீ;திருத்தத்தின் படி முதன்மை நிலை - i , முதன்மை நிலை - ii, முதன்மை நிலை - iii எனப் பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை நிலை ஒன்றில் தரம் 1,2 வகுப்புக்களும், முதன்மை நிலை இரண்டில் தரம் 3,4 வகுப்புக்களும், முதன்மை நிலை மூன்றில் தரம் ஐந்து வகுப்பும் அடங்கும். இவ்வகுப்புக்களில் அதாவது தேர்ச்சி மையக் கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது ஒவ்வொரு வருடத்திற்கும் அடைய வேண்டுமென எதிர்பார்க்கப்படும் அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை மாணவர் பெற்றுக் கொள்வதுதான் முக்கியமானது. 2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் ஆம்பக் கல்வி சீர்திருத்தத்திலும் பாரிய மாற்றங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. பாட நூல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய மொடீயூல் முறை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனால் மாணவர்கள் புத்தகங்களை சுமக்க வேண்டிய அவசியமில்லை என்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

பொதுவாக கலைத்திட்டத்தில் பிள்ளை அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படும் தேர்ச்சிகள் மட்டும் இங்கு கவனத்தில் கொள்ளப்படப்போவதில்லை. இங்கு பிள்ளையின் உடல், உள வளர்ச்சி மிக முக்கியத்துவம் செலுத்தப்படுகின்றது. ஆகவே பிள்ளையின் போசாக்கு மீது மிகுந்த கவனம் செலுத்தப்படுகின்றது. இதற்காகவே பெற்றோர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு போசாக்கு, சுகாதாரம் தொடர்பாக அடிக்கடி அறிவுறுத்தப்படுகின்றனர். அறிவு, திறன், மனப்பாங்கு விருத்தியடைவதற்கு போசாக்கும் சுகாதாரமும் தனது பங்களிப்பைச் செய்யும்.

மாணவர்களுடைய கல்வி தொடர்பாக நோக்கும்போது பெற்றோரினதும், பாடசாலையினதும் பங்களிப்பு மிக உன்னதமானதாக இருக்க வேண்டும். ஆனால் கற்றல், கற்பித்தல் செயற்பாடானது ஆசிரியர் - மாணவரைச் சார்ந்ததாகும். ஆகவே ஆரம்பக்கல்வியானது முழுக்க முழுக்க பெற்றோரின் பங்களிப்புடன் மாணவருக்குச் சொந்தமானது. அதை மறுக்க முடியாது.

பெற்றோர் தமது பிள்ளைகளின் ஆரம்பக்கல்விக்கு தமது பங்களிப்பை வழங்க முடியும். பாடங்களைப் படித்தால் மட்;டும் போதும் என்று இருந்து விடமுடியாது. மாணவர்கள் பாடசாலை விட்டு வந்ததும் தாயும் தந்தையும் பிள்ளையை சுயமாக சுதந்திரமாகக் கற்பதற்கு ஏற்றாற்போல் தமது வீட்டுச் சூழலைக்; கவனிக்க வேண்டும். பெற்றோரிடையே எற்படும் சண்டை, தகராறு, அமைதியின்மை போன்றன பிள்ளையின் கல்வியைப் பாதிக்கும். எனவே பெற்றொர் பிள்ளைகள் கற்பதற்கான பங்களிப்பினை வழங்க முடியுமே தவிர்த்து பெற்றோர்கள் பிள்ளைகளினுடைய கல்வியை முழுமையாக உள்வாங்கி விடக்கூடாது.

கற்பித்தல் பயிற்சியைப் பெற்றிருக்கும் ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியர்தான் ஆரம்பக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் கல்வியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும். ஆகவே ஆரம்பக்கல்வி கற்கும் மாணவருக்குரியது!

ஆரம்பக்கல்வி மாணவர்மையக்கல்வி முறையை அடிப்படையாகக்கொண்டது. அதாவது மாணர்களது செயற்பாட்டு ரீதியான கற்றலுக்குரிய வழிகாட்டலை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். உதாரணமாக தாவரங்கள் ஆவியுயிர்ப்பை நடத்துகின்றது என்ற விடயம் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்தில் இடம் பெறுகிறது. அதற்கான ஒரு பரிசோதனையை செய்வதற்கு அசிரியர் வழி காட்டுவார். தாவரத்தின் இலையைத் தெரிவு செய்தல், உலர்ந்த பொலித்தீன் பையைத் தேடிப் பெறுதல், தாவரத்தின் இலைகளை பொலித்தீன் பைக்குள் விட்டு கட்டுதல் போன்ற செயற்பாடுகளை மாணவர்கள் செய்வர். சற்று நேரத்தின் பின் பொலித்தீன் பையை அவதானித்தபோது பொலித்தீன் பையில் நீர்த்துளிகள் இருக்கக் காணப்பட்டது. ஆகவே மாணவர்கள் தாவரங்கள் ஆவியுயிர்ப்பை நடத்துகின்றன என்ற அறிவியல் உண்மையை அறிந்து கொள்வர். இவ்வாறு முழுக்க முழுக்க மாணவர் செயற்பாட்டுடன் கற்று அறிவு, திறன், மனப்பாங்கினை விருத்தி செய்து கொள்வர். எனவே ஆரம்பக் கல்வி மாணவருக்கானது.

ஆயினும் இன்றைய ஆரம்பக்கல்வியில் மாணவருக்கான செயற்பாடுகள் யாவும் முற்றிலும் பெற்றோரால் ஆட்கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக நோக்கின் 2026இல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சீர்திருத்தத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்கான கல்வியானது செயற்பர்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மாணவர்களது விளையாடடினை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலையில் வீடுகள் கட்டப்படுகின்றன. இவை முற்றிலும் பெற்றோருக்கான செயற்பாடாகவே உள்ளது.

ஆரம்ப வகுப்பக் கலைத்திட்டத்தில் உடற்கல்வி, சமய வழிபாட்டுக் கல்வி என்பன முக்கிய இடம் பெறுகின்றது. “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” ஆகவே இளம் வயதில் உடல் இயக்க செயற்பாடு முக்கியமானதாகும். இதன் காரணமாகத்தான் காலை பாடசாலை ஆரம்பித்ததும் உடல் இயக்க செயற்பாடு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படுகின்றது. ஆகவே ஆரம்பக் கல்வி பெற்றோருக்கானது என எடுத்துக் கொண்டால் பெற்றோருக்கு இந்த உடலியக்;க செயற்பாட்டை வழங்க முடியாது.

ஆரம்பக்கல்வியில் முக்கியத்துவம் பெறுவது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை. இது வறுமை மாணவர்களுக்கு ஒரு ஆதாரத்தை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பெற்றோர்களைக் பொறுத்தவரையில் அது தமது கௌரவம். அந்தக் கௌரவத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பெற்றோர்களே முழுமையாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரே தவிர பிள்ளைகள் தாமாக விரும்பி கற்கும் நிலை குறைவே. பேற்றோர்களின் இந்த அவா பிள்ளைகளை அழுத்தத்திற்குள்ளாக்குகின்றது.

அது மட்டுமா ! பாடசாலையில் பிள்ளைகளுக்கு செயற்பாடுகளைச் செய்து வரச் சொல்வது பிள்ளைகளின் சிந்தனைத் திறனை விருத்தி செய்வதற்கே. ஆனால் செயற்பாடுகளைச் செய்வது பெற்றோரே. இந்நிலை எப்போது மாறும்? 2026 ஆம் ஆண்டின் புதிய கல்வி சீர்திருத்தத்தின செயற்பாடுகளும் இவ்வாறே உள்ளன. இன்றும் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாடுகளை பெற்றோர்கள் செய்வதனைக் கண்கூடாகக் காண முடிகின்றது. ஆகவே தான் 2026 ஆம் ஆண்டின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் பாரியளவு மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரியவில்லை எனக் கூறவேண்டியதாயிற்று.

ஆரம்பக்கல்வி மாணவர்களக்கானதே. பெற்றோர்கள் இல்லாமல் பிள்ளைகளுக்கு தகுந்த வழிகாட்டல் இல்லை என்பது முற்றிலும் மறுக்க முடியாத ஒன்றே. இந்நிலை மாற்றமுற வேண்டுமென்னின் பெற்றோர்களே பிள்ளைகளின் கல்வியில் தங்களது பங்கு என்பதனை உணர வேண்டும். அதற்கேற்றவாறு கல்வித்திட்டங்கள் அமைக்கப்படவேண்டும். கல்வி என்பதே மாணவர்களுக்குரியது தானே.


ச.சஞ்ஜனா
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை
2ம் வருட சிறப்புக் கற்கை மாணவி
கிழக்குப் பல்கலைக்கழகம்.