சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட ஆலோசனைகள்


நாளை (17) ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
 
இன்றைய இரவில் நித்திரையைத் தவிர்த்துப் படிப்பதில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல என்றும், மத வழிபாடுகளில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறினார்.

அதேபோல் இந்த குறுகிய காலப்பகுதிக்குள், இதுவரை கற்காத புதிய பாடவிடயங்களைக் கற்பதற்காக நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்க்குமாறும் மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே படித்துள்ள பாடங்களை மீண்டும் ஒருமுறை மீட்டுவது மாத்திரம் போதுமானது என பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வினாத்தாள் வழங்கப்பட்ட பின்னர், முதல் 5 நிமிடங்கள் மிக முக்கியமானவை என்றும், அந்தக் காலப்பகுதியில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்பதால் முதல் வினாவுக்கு உடனடியாக விடையளிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலாக அந்த நேரத்தை, வினாத்தாளை நன்றாக வாசித்து, மிகவும் இலகுவாக விடையளிக்கக்கூடிய வினாவொன்றைத் தெரிவு செய்வதற்குச் செலவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு இலகுவான வினாவொன்றைத் தெரிவு செய்து விடையளிக்க ஆரம்பிப்பது, பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கான மிகச் சிறந்த அணுகுமுறையாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் எதிர்மறையான அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறையான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் முதலாவது முக்கியமான விடயம், நீங்கள் படித்துள்ள பாடங்களுக்கு மேலதிகமாக புதிதாக எதையும் படிக்க முயற்சிக்காதீர்கள். ஏற்கனவே படித்தவற்றை மீட்டுவது சிறந்தது. பரீட்சையின் போது உங்கள் மனதை நிதானமாக வைத்துக்கொள்வதற்காக வீட்டில் நிம்மதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பரீட்சைக்கு முந்தைய நாள் நித்திரையைத் தவிர்த்துப் படிப்பது பொருத்தமான ஒன்றல்ல. நாளை தினத்திற்குத் தேவையான பேனா, பென்சில்களை இன்றே தயார் செய்து கொள்ளுங்கள். பரீட்சைக்கு முகங்கொடுக்கும் போது முதல் 5 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த நேரத்தில் உங்கள் மனதில் அழுத்தம் அதிகமாக இருக்கலாம், எனவே முதல் 5 நிமிடங்களில் முதல் வினாவுக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டாம். வினாத்தாளை வாசித்துவிட்டு, உங்களால் எழுதக்கூடிய மிக இலகுவான வினாவொன்றைத் தெரிவு செய்தே பரீட்சையை எழுத ஆரம்பிக்க வேண்டும்." என்றார்.

2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.