கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் !

(நூருல் ஹுதா உமர்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ள அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இன்சாத் பானு அவர்கள் இந்த மும்மகப் பிரசவத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த அரிய மற்றும் சிறப்பான பிரசவம், மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட் மற்றும் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் ஆகியோரின் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

பிறந்த மூன்று ஆண் குழந்தைகளும் தற்போது மருத்துவ கண்காணிப்பின் கீழ் நலமாக உள்ளதாகவும், தாயாரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் சுகநலத்திற்காக வைத்தியசாலையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. இதில் திட்டமிடல் வைத்திய அதிகாரி எம். எம். தாஸிம், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி கே. எல். எம். றைஸ், வைத்தியர்கள், மேட்ரன், தாதியர்கள், மிட்வைவ்ஸ் மற்றும் சுகாதார சேவை உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் பீ. எம். அர்சாத் அகமட் தலைமையிலான குழுவினர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். இவ்வரிய மற்றும் மகிழ்ச்சியூட்டும் பிரசவம் பிராந்திய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் !

Posted by Battinews on Thursday, February 26, 2026